கீதைப் பதிவு -13 க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்
அர்ஜுனன் சொன்னது.
பிரகிருதி புருஷன்,க்ஷேத்திரம் க்ஷேத்ரக்ஞன், ஞானம், ஞேயமாகிய இவைகளை அறிந்து கொள்ள, கேசவா நான் விரும்புகிறேன்(பல பதிப்புகளில் இந்த சுலோகம் காணப்படுவதில்லை.)
ஸ்ரீ பகவான் சொன்னது.
குந்தி புத்திரா, இவ்வுடலம் க்ஷேத்திரம் எனப்ப்டுகிறது. இதை அறிகிறவனை க்ஷேத்ரக்ஞன் என்று ஞானிகள் பகர்கிறார்கள்.(1)
அர்ஜுனா, க்ஷேத்ரங்களனைத்திலும் என்னை க்ஷேத்ரக்ஞன் என்று அறிக..க்ஷேத்திரம் க்ஷேத்ரக்ஞன் பற்றிய அறிவே ஞானம் என்பது என் கொள்கை.(2)
அந்த க்ஷேத்திரம் யாது, எத்தன்மைகளை உடையது, என்ன பிரிவுகளை உடையது, எதிலிருந்து உண்டானது,அந்த க்ஷேத்ரக்ஞன் யார்,அவன் மகிமை யாது—இவைகளைச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேள்,(3)
(இவ்வுண்மை) ரிஷிகளால்விதவிதமான சந்தஸ்களில்(இயல் இசைகளில்)பாங்காகப் பல வகைகளில் பாடப் பெற்றிருக்கிறது.யுக்தியால் நிச்சய புத்தியைத் தந்து, பிரம்மத்தைக் குறிக்கிற பதங்களாலும் பாடப் பெற்றிருக்கிறது.(4)
மஹாபூதங்கள் (ஆகாசம்,வாயு, அக்கினி, அப்பு, பிருதிவிஆகிய ஐந்து பூதங்களும் சூக்ஷுமமாக எங்கும் உள்ளபடியால் அவை மஹாபூதங்கள்)அகங்காரம், புத்தி, மூலப்பிரகிருதி, இந்திரியங்கள் பத்து,மனம் ஒன்று,இந்திரியார்த்தங்கள் ஐந்து, விருப்பு வெறுப்பு, இன்பம், துன்பம், உடலமைப்பு, உணர்வு, உறுதி, -இங்ஙனம் க்ஷேத்திரமும் அதன் தோற்றங்களும் சுருக்கமாகச் சொல்லப் பட்டன,(5.6) (அகங்காரம் –பூதங்களின் காரணமாக எழும் இருக்கிறேன் என்னும் உணர்ச்சிஅகங்காரம் எனப் படுகிறது; புத்தி அகங்காரத்துக்குக் காரணம். மூலப்பிரகிருதி அல்லது அவ்யக்தம் புத்திக்குக் காரண்ம். இவையாவும் ஈசுவரசக்தி. பத்து இந்திரியங்கள் –கண் முதலிய ஐந்து ஞாநேந்திரியங்கள் ஐந்து கை முதலிய கர்மேந்திரியங்கள் ஐந்து; மனம் –பத்து இந்திரியங்களுக்கும் பொதுவானது. இந்திரியார்த்தங்கள்-சப்த ஸ்பரிச, ரூப, ரச, கந்த வடிவங்களாயுள்ள ஐந்து இந்திரியங்களின் விஷயங்கள் .இச்சை ,துவேஷம் சுகம் ,துக்கம், சங்காதம்=உடலமைப்பு, உணர்வு, உறுதி, க்ஷேத்திரம் என்று உடலை முதல் சுலோகத்தில்சொல்லியதன் முழுவிளக்கம் இந்த இரு சுலோகங்களில் வந்து அமைகிறது.)
தற்பெருமையின்மை, தருக்கின்மை, அஹிம்சை, பொறுமை, நேர்மை குரு சேவை, தூய்மை விடாமுயற்சிதன்னடக்கம்(7)
விஷயங்களில் விருப்பின்மை. அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, மூப்புபிணி துயரமாகியவைகளில் கேடுகாணுதல்(8)
பற்றின்மை, மகன் மனைவி, வீட்டைத் தனதென்று அபிமானியாதிருத்தல், வேண்டுவன வேண்டாதவை விளையு மிடத்து மனம் யாண்டும் நடு நிற்பது(9)
வேறு எதையும் எண்ணாத யோகத்தால், என்னிடம் பிறழாத பக்தி பண்ணுதல், தனியிடத்தை நாடுதல், ஜனக்கூட்டத்தில் விருப்பமின்மை(10)
ஆத்ம ஞானத்தில் நிலைபேறு, உண்மைப் பொருள் ஆராய்ச்சி, -இவையாவும் ஞானமாம். இவற்றுக்கு அன்னியமானவை அக்ஞானம்(11)
அறியத்தக்கது எது, எதை அறிந்து ஒருவன் சாகாத்தன்மை எய்துகிறான், அதைப் பகர்கிறேன். அது ஆதியில்லாத பரப்பிரம்மம்.உளது இலது என வொண்ணாதது.(12)
அது எங்கும் கைகால்களை உடையது, எங்கும் கண், தலை, வாய்களையுடையது, எங்கும் காதுகளை உடையது, உலகில் அனைத்தையும் அது வியாபித்துள்ளது(13)
இந்திரியங்கள் அனைத்தின் வாயிலாகஒளிர்வது, இந்திரியங்கள் யாவையும் அற்றது, பற்றற்றது, அனைத்தையும் பற்றித் தாங்குவது, குணங்களே இல்லாதது, எனினும் குணங்களை அனுபவிப்பது.(14)
பொருள்களுக்குப் புறமும் உள்ளும் உள்ளது,அது அசையாதது, அசைவது, நுண்மையானது ஆதலால் அறிய அரிது.எட்டவும் கிட்டவும் இருப்பது அது.(15)
அது பிளவு படாதது, பொருள்களில் பிளவு பட்டதுபோல் இருக்கிறது. பொருள்களைத் தாங்குவதும், விழுங்குவதும், தோற்றுவிப்பதும் அது என்று அறிக.(16)
ஒளிக்கெல்லாம் ஒளியாகிய அது,இருளுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லப் படுகிறது.அறிவும் அறியப்படும் பொருளும், அறிவினால் அடையப் படுவதுமாகிய அது எல்லோரது உள்ளத்திலும் நிலைத்திருக்கிறது(17)
க்ஷேத்திரமும் ஞானமும் ஞேயமும் இங்ஙனம் சுருக்கமாகச் சொல்லப்பட்டன. இதை அறியும் என் பக்தன் என்னையடையத் தகுந்தவனாகிறான்.(18)
பிரகிருதி புருஷன் ஆகிய இரண்டுமே ஆதி இல்லாதவைகள் என்று அறிக.
வேறுபாடுகளும் குணங்களும் பிரகிருதியில் பிறந்தவைகள் என்று உணர்.(19)
உடலுக்கும் இந்திரியங்களுக்கும் காரணம் பிரகிருதி எனப் படுகிறது.இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்குக் காரணம் ஜீவன் எனப்படுகிறான்.(20)
புருஷன் பிரகிருதியில் நின்று பிரகிருதியில் தோன்றிய குணங்களைத் துய்க்கிறான்.அவனுக்கு நலம் கேடு உடைய பிறவிகள்.அதற்குக் காரணம் குணப் பற்றே(21)
இத்தேகத்தில் உள்ள பரம புருஷ்னானவன் சாக்ஷி, அனுமதிப்பவன், தாங்குபவன், அனுபவிப்பவன், மஹேஸ்வரன், பரமாத்மன் இப்படியெல்லாம் இயம்பப் படுகிறான்(22)
இங்ஙனம் புருஷனையும் குணங்களுடன் கூடிய பிரகிருதியையும் அறிபவன் எவ்வாறு வாழ்பவனாயினும் அவன் மறுபடியும் பிறப்பதில்லை.(23)
த்யானத்தால் தெளிவடைந்த அறிவால்,சிலர் ஆத்மாவை உள்ளத்தில் உணர்கின்றனர். சிலர் ஞான யோகத்தாலும் இன்னும் சிலர் கர்ம யோகத்தாலும் காண்கின்றனர்(24)
இன்னும் சிலர் இங்ஙனம் உண்மையை அறியாதவர்களாயினும் பெரியோர் சொல் கேட்டு அதில் பெருநம்பிக்கை வைத்தொழுகி மரணத்தை நிச்சயமாகக் கடக்கின்றனர்(25)
அர்ஜுனா, நிலைத்திணை இயங்கு திணையாகிய எவ்வுயிர் தோன்றி உள்ளதோ அது க்ஷேத்திர க்ஷேத்ரக்ஞனுடைய சேக்கையால் என்று அறிக.(26)
உயிர்கள் அனைத்திலும் சமமாய் இருக்கிறவனும் , அழிவனவுற்றுள் அழியாதவனும் ஆகிய பரமேசுவரனைப் பார்ப்பவனே பார்க்கிறான்.(27)
எங்கும் ஒப்ப நிலைத்திருக்கும் ஈசனைக் காண்போன் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறானில்லை. அதனால் அவன் பரகதி அடைகிறான்.(28)
கர்மங்களெல்லாம் பிரகிருதியினாலேயே செய்யப் படுகின்றன என்றும், ஆத்மா செயலற்றது என்றும் யார் பார்க்கிறானோ அவனே பார்க்கிறான்.(29)
தனித் தனியாக வாழும் பிராணிகள் ஒரே பொருளில் இருப்பதையும், அந்த ஒரு பொருளிலிருந்தே அவைகள் விரிவடைவதையும் காணும்போது அவன் பிரம்ம மாகிறான்(30)
குந்தி புத்திரா, ஆதி இல்லாததால், குணமில்லாததால், கேடில்லாத இப்பரமாத்மா சரீரத்தில் இருப்பினும், அது செயலற்றது, பற்றற்றது(31)
எங்கும் நிறைந்துள்ள ஆகாசமானது நுண்ணியமாயிருப்பதால் எப்படிக் களங்க மடைவதில்லையோ, அப்படியே தேகமெங்கும் நிறைந்துள்ள ஆத்மா களங்கம் அடைவதில்லை.(32)
ஒரு சூரியன் எப்படி உலகனைத்தையும் ஒளியுறச் செய்கின்றதோ, அப்படி அர்ஜுனா, பிரபஞ்சம் அனைத்தையும் பரமாத்மா பிரகாசிப்பிக்கிறான்(33)
இவ்வாறு க்ஷேத்திர க்ஷேத்திரக்ஞனுக்கிடையில் உள்ள வேற்றுமையையும் உயிர்கள் பிரகிருதியில் இருந்து விடுதலை அடைவதையும்ஞானக் கண்ணால் காண்போர் பிரம்மத்தை அடைகின்றனர்.(34)
க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் நிறைவு.
Gila River Hotel & Casino, Ateca, CA
ReplyDeleteGila River Hotel & Casino 샌즈카지노 in Ateca, CA. $100,000. A 10-day stay at Ateca Casino can be choegocasino a pleasant and rewarding experience. Gila River Hotel & 1xbet Casino is a