''வெந்ததைக் குறைத்தால்
வேதனையை குறைக்கலாம்...!’'
வேதனையை குறைக்கலாம்...!’'
''எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலேயே, 'உணவே மருந்து; மருந்தே உணவு’ன்னு திருமூலர் சொல்லிட்டுப் போயிட்டார். இந்த அ...ற்புதமான வாக்கை ஆராதிக்கத் தவறியவர்கள்தான் எண் சாண் உடம்பில் எண்ண முடியாத வியாதிகளோடு அலையறாங்க. வாழ்க்கையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நோயே வராமல் வாழ்வது. இரண்டாவது, நோய் வந்த பின் வருந்தியபடியே வாழ்வது. முதல் வகையில் இணைந்துவிட்டால், நமக்கு இன்னல்கள் இருக்காது.
'மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்’ என்ற குறளிலேயே நோய் அண்டாமல் வாழ்வதற்கான வழி சொல்லப்பட்டு இருக்கிறது. உண்ட உணவு சீரணமாகிவிட்டதை அறிந்து, அதன் பிறகு உண்டால் அந்த உடம்புக்கு மருந்து என்ற ஒன்றே தேவை இல்லை எனச் சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.
எதை, எப்போது, எப்படி உண்ண வேண்டும் என்பதே நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. நாம் உண்ணும்போது முதலில் உணவை விழுங்குறோம். ஆனால், அப்படி விழுங்கக்கூடாது. பற்களால் நன்றாக அரைத்து, கூழாக்கி உமிழ்நீரோடு சேர்த்து உள்ளே தள்ளவேண்டும். இதைத்தான், 'நொறுங்கத் தின்றால் நோய் தீரும்!’ எனப் பழமொழியாகச் சொன்னார்கள். அளவு கடந்து உணவு உண்பவர்கள் நோய்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். நாம் உண்ணும் உணவுக் கழிவுகள் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேங்குகிறது.
இதன் அளவு அதிகரிக்கும்போது நோய் உண்டாகிறது. சரி, அதை எப்படிக் களைவது? இதற்கான சுலபமான வழி, உண்ணாநோன்பு. இதைத்தான் 'விரதம்’ என்ற பெயரில் கடைபிடித்தார்கள் நமது முன்னோர்கள். 'நோயிலே படுப்பதென்ன கண்ண பரமாத்மா, நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ண பரமாத்மா’ எனப் பாடினார்களே... அந்த நோன்புதான் உண்ணாநோன்பு. இறக்கும் தருவாயில் இருப்பவனைக்கூட உயிர்த்தெழுச் செய்யும் சக்தி உண்ணா நோன்புக்கு இருக்கிறது.
இதைத்தான் ஆங்கிலத்தில் 'தெரப்பூட்டிக் பாஸ்ட்டிங்’ (Theraupeutic fasting) என்று சொல்கிறார்கள். இன்றைக்கு சர்வதேச அளவில் இந்தச் சிகிச்சை பிரபலமாகி வருகிறது. உண்ணாநோன்பு இருக்கும்போது நம் உடலுக்குள் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் தன்னாலே வெளியேறி விடுகின்றன. உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள நாம் அனுமதிக்க வேண்டும்.
அடுத்ததாக, எதைச் சாப்பிட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். நம் உணவில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 'வெந்ததைக் குறைத்தால் வேதனையை குறைக்கலாம்’ என்பார்கள். அதாவது வேகவைத்த உணவைக் குறைத்துக்கொண்டு பச்சைக் காய்கறிகள், பழங்களை உண்ண வேண்டும். நான் 35 வயதில் கண்ணாடி அணிந்தேன். 60 வயதில் அதை அகற்றிவிட்டேன். இப்போது கண்ணாடியைப் பயன்படுத்துவதே இல்லை. பொடி எழுத்துக்களைக்கூட என்னால் துல்லியமாக வாசிக்க முடியும். இதற்குக் காரணம் எனது உணவுப் பழக்கங்கள்தான்!''
-இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்.
No comments:
Post a Comment