நண்பர் - மனதை செம்மை படுத்த முயற்சிக்காதீர்கள் வெறுமை படுத்துங்கள், மனதை செம்மை படுத்துவது தேவையில்லாத வேலை என்று ஒரு பகிர்வை சமீபத்தில் முகநூலில் கண்ணுற்றேன். அதுவும் சரியென்றே படுகிறது. இது பற்றி உங்கள் கருத்தென்ன ?
இராம் மனோகர் - ஒவ்வொருக்கு ஒவ்வொரு முகம். ஒவ்வொரு கைரேகை, ஒவ்வொரு கண் அமைப்பு, வெவ்வேறு மனப்பாங்கு, வெவ்வேறு கோணம். எனவே முரண்பாடுகளுக்கு பஞ்சமில்லை. ஆனால், இத்தனை வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் அடிப்படையான விஷயம் என்னவோ அனைவருக்கும் ஒன்றுதான். அது போலவே அவரவர் அனுபவங்களைக் கொண்டு யுக்திகளை முன் வைக்கிறார்கள். கூர்ந்து கவனித்தால் நோக்கமும் உட்கருத்தும் ஒன்றாகத்தான் இருக்கும். அவரவர் மொழி இயல்புக்குத் தகுந்தவாறு வார்த்தைகள் மாறுபடுகின்றன. பொதுவாக மனம் முழுவதும் எண்ணங்கள் எனும் குப்பைகள் நிரம்பிக் கிடக்கின்றன என்று சொல்வார்கள். ஆனால், அப்படிச் சொல்வது யுக்திக்குப் பொருந்தாது. எண்ண அலைகளின் பதிவுகள்தான் தொகுப்புகளாகி சித்தத்தில் புதைந்து கிடக்கின்றன.
இவற்றை கர்ம பீஜங்கள் என்பார்கள். இந்த கர்ம பூஜங்களை செயலிழக்கச் செய்ய வேண்டுமென்றால் புறமனதின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தியே ஆக வேண்டும். அதாவது புறமனமானது புலன்கள் மூலம் புறச் சூழலை நுகரும் பொழுதுதான் சித்தத்தில் புதைந்து கிடக்கும் கர்ம பீஜங்கள் எனும் சம்ஸ்காரங்களும், வாசனைகளும் அதனோடு தொடர்புடைய புதிய எண்ணங்களை உருவாக்குகின்றன. எனவே நாம் புற மனதின் செயல்களை ஒழுங்குபடுத்தியே ஆக வேண்டும். புறமனதை ஒழுங்குபடுத்த புலன்களை கட்டுப்படுத்த வேண்டியதிருக்கிறது. இப்படிப்பட்ட பல்வேறு முயற்சிகளைத்தான் மனதை செம்மைப்படுத்துவது என்று சொல்வார்கள். மனம் வெறுமையடைய வேண்டும் என்று சொல்வது ஒரு கருத்து அவ்வளவுதான். நாம் முதலில் செய்ய வேண்டியது பழைய பதிவுகளுக்கும், புறமனதிற்குமான தொடர்பை துண்டிக்க வேண்டும். அப்பொழுதுதான் பழைய சம்ஸ்காரங்கள் வலுவிழந்து போகும். வலுவிழந்தால் மட்டும் போதுமா ? அவற்றை செயலிழக்கச் செய்ய வேண்டும். அதாவது நம் தவ அக்னியால் அதை வறுத்து விட வேண்டும். வறுத்த விதை முளைக்காது.
கடுமையான முயற்சிகளுக்குப் பிறகுதான் இது சாத்தியமாகும். இத்தகைய முயற்சிகளையே செம்மைப்படுத்துவது என்கிறார்கள். மனதை வெறுமைப்படுத்துவதற்கு எதுவுமில்லை. மனம் என்பது எண்ணங்களின் தொகுப்புதான். எண்ணங்களை படிப்படியாகக் குறைத்துக் கொண்டே வந்து, இறுதியில் ஒரே எண்ணத்தில் நிலை நிறுத்தி விடுவோமேயானால் மனம் என்பது தன்னிறைவை அடைந்து வலிமை பெற்று, தூய்மையான நிலையை அடைந்து விடும். தூய்மையான மனம் என்பதுதான் பரம்பொருள் நிலையே தவிர வேறொன்றுமில்லை. பலவீனமான மனமே சலனப்பட்டு அலைந்து கொண்டிருக்கும். சலனமற்ற நிலையை மனம் அடைய வேண்டுமென்றால் அது பலமடைய வேண்டும். அத்தகைய மனோபலத்தை தியானத்தின் மூலமாகவே அடைய முடியும். அது படிப்படியாகவே நிகழும். நம் விடாமுயற்சியினால்தான் மனநிலையில் சிறுகச் சிறுக மாற்றங்களைக் கொண்டு வர முடியும். தியானத்தின் மூலம் முதலில் நாம் அடையும் பலன் என்ன தெரியுமா ? தன்னிறைவு.
பூமியில் தோன்றிய உயிர்கள் அனைத்திற்கும் இடையூறுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஏதேனும் ஒரு வகையில் இயற்கையானது இடையூறுகளை ஏற்படுத்தி, இந்த உயிர் வாழ்க்கை, உலக வாழ்க்கை நிலையற்றது என்பதை உணர்த்தி விடத் துடிக்கிறது. இதுதான் உண்மை. அதெல்லாம் கிடையாது, நான் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன் என்று ஒருவன் சொல்வானேயானால்,அது பொய்யாகும். அவன் தன் மனதின் ஆழத்தில் உள்ள இனம் புரியாத ஏக்கத்தையும், தன்னிறைவற்ற நிலையையும் மறைக்கிறான் என்பதே உண்மை. இந்நிலை இல்லாத மனிதனே கிடையாது. இந்த ஏக்கம்தான் தன்னிறைவற்ற வெற்றிடமான மனோபாவமாகும். நாம் இந்தத் தன்னிறைவை அற்ப விஷயங்களில் பெற முயன்று, தோற்று, உடல் இளைத்து, நரை, திரை, மூப்பு எய்தி முடிவில் மடிந்தே போகிறோம்.
சில நூல்களில் நம் முன்னோர் மனதை அழிந்து விடு என்பார்கள். மனதை அழிப்பது என்றால் புற மனதை அழிப்பது என்றே பொருள். அதாவது தூல தேகத்தின் ஆதிக்கத்திலிருந்து மனம் விடுவித்து புத்தி நிலையை வலிமைப்படுத்து என்கிறார்கள். அதுவே மனவலிமை எனப்படுகிறது. தூல சரீரம் அதிக காலமும், அதிக அளவிலும் சூக்கும சரீரத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் பொழுதுதான் மனிதனால் எதையும் சாதிக்க முடிவதில்லை. வாழ்வில் தொடர்ந்து தோல்விகளையே ஒரு மனிதன் சந்திக்கிறான் என்றால், அவனது சூக்கும சரீரமானது தூல சரீரத்தின் ஆதிக்கத்திற்கு வசப்பட்டுக் கிடக்கிறது என்பதை யாரும் சொல்லாமலே புரிந்து கொள்ளலாம். சிலர் உப்பு சப்பற்ற மந்தமான வாழ்வை உடையவர்களாக இருப்பதற்குக் காரணமும் இதுதான். விலங்குகள் வாழ்வும் அத்தகையதுதான். உண்ணுவது, உறங்குவது, உறவு கொள்வது இதைத் தவிர வேறு எதுவும் அவைகளுக்குத் தெரியாது. உடல் வயப்பட்ட மனிதர்களுக்கும் அவற்றிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் எதுவுமில்லை. தூல சரீரத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட மனம் தன் தனித்தன்மையை இழந்து விடுகின்றது. அந்த நிலையையே புற மனம் என்கிறார்கள். தூல சரீரத்திலிருந்து மனதை பிரிக்கும் அளவு சூக்கும சரீரமான மனம் புத்தி நிலையில் இயங்கி வலிமைபெறுகின்றது. மனதின் வலிமையே முக்திக்கான ஒரே வழி. வேறு வழி இல்லை.
எனவே நாம் செய்கின்ற சரியை, கிரியை மற்றும் யோக முயற்சிகள் அனைத்தும் மனதை செம்மைப்படுத்தவே. கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க முடியுமா ? எனவே மனமெனும் குட்டை முதலில் தெளிய வேண்டும். அதற்கு முதலில் எண்ணங்களை செம்மைப்படுத்த வேண்டும். எண்ணங்களைப் பொருத்த வரை நல்லது, கெட்டது என்ற பாகுபாடு இல்லாமல் ஒரு பரஸ்பர நிலையை, சாந்தமான நிலையை பெற்றால்தான் தன்னிறைவு என்பது வாய்க்கும். அத்தகைய எண்ணங்களே தெய்வீக எண்ணங்களாகும். தெய்வீக எண்ணங்களே தெய் அருளாகும். தெய்வ அருள்தான் தன்னிறைவை ஏற்படுத்தித் தரும். அந்நிலையை அடையும் வரை இடையூறுகள் என்பது தொடர் கதைதான். இடையூறுகள் என்பது வேறொன்றுமில்லை, நம் வினைப் பதிவுகள்தான். தியானத்தால் மட்டும்தான் அவற்றை அழிக்கவோ அல்லது மாற்றவோ முடியும். பழைய வினைகள் நீங்க நீங்க மனம் சலனமற்ற நிலையில் உயர்ந்து கொண்டேயிருக்கும். ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு தடைகளெல்லாம் படிகளாக மாறும். அதுவே தியானத்தின் வல்லமையாகும். புற விஷயங்களில் மனதை செம்மைப்படுத்துவது என்பது கடினமான பயிற்சியாகும். தியானத்தில் அது மிகவும் எளிது.
தியானம் என்பது மனம் தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் ஒரு யுக்தியாகும். ஆட்டம் பாட்டமெல்லாம் அடங்கி மூன்றாகப் பிரிந்து கிடக்கும் மனம் ஒன்றிற்குள் ஒன்று ஒடுங்கி, முடிவில் ஆன்மாவில் லயமாகி விடும். எனவே அவர்கள் வெற்றிடம் என்று குறிப்பிடுவது எண்ணமற்ற நிலையைத்தான் என்பதைப் புரிந்து கொண்டால் குழப்பமேதுமில்லை. அதாவது புதிய எண்ணங்கள் எழாத நிலை.
No comments:
Post a Comment