விதி என்பது என்ன ? அது இறைவனால் வகுக்கப்பட்டதா ?”தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது ஆன்றோர் வாக்கு. நேற்றைய செயல் இன்றைய விதி. இன்றைய செயல் நாளைய விதி. ஒருவர் விழிப்புப் தன்மையில் இருந்தால் தெளிவு ஏற்பட்டு மதி விதியாகும். மயக்கத்தில் இருந்தால் அறியாமை உண்டாகி விதி மதி ஆகிவிடும்.இறைவனுக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் விருப்போ வெறுப்போ கிடையாது. இறை ஆற்றல் மின்சாரத்தைப் போன்றது. எப்படி பயன்படுத்துகிறோமோ அப்படியே பலன்களைத் தரவல்லது. மின்சாரத்தை கற்றாடியில் பயன்படுத்தினால் காற்றாடி சுற்றும். விளக்குக்குப் பயன்படுத்துனால் விளக்கு ஒளி தரும்.அது போல இறை ஆற்றலும் உயிர்களின் எண்ணம், சொல், செயல்களுக்குத் தகுந்தாற்போல் விளைவுகளைக் கொடுக்கின்றது.நமது உடல் பரு உடல், நுண் உடல், காரண உடல் என மூன்று வகையாக உள்ளது. இவ் மூன்று உடல்களைத் தாண்டி உள்ளே ஆன்மா பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.இவற்றில் காரண உடல் என்பது விமானத்தில் உள்ள கறுப்புப் பெட்டியைப் போன்றதாகும். விமானத்தில் நடைபெறும் எல்லா நிகழ்வுகளும் கறுப்புப் பெட்டியில் பதிவு ஆவதைப் போல நனவினில், கனவினில் நடைபெறும் எல்லாச் செயல்களுமே காரண உடலில் பதிவாகிறது.எண்ணத்தின் திண்மை சொல்லாக மாறுகிறது, சொல்லின் திண்மை செயலாக மாறுகிறது. எத்தனையோ எண்ணங்களை எண்ணினாலும் அவற்றில் திண்மையான எண்ணங்களே சொல்லாக மாறுகிறது. அதே போல் திண்மையான சொற்களே செயல் வினையாக மாறுகிறது.செயல் வினைகள் பிரார்த்த வினை, சஞ்சித வினை, ஆகாமிய வினை என மூன்று வகைப்படும்.ஒருவர் நேற்று நூறு ரூபாய் சம்பாதித்ததை வினைப் பதிவாகக் கொள்ளலாம். அந்த நூறு ரூபாயில் ஐம்பது ரூபாயை இன்று வெளியில் முதலீடு செய்வது பிரார்த்த வினை. மீதி உள்ள ஐம்பது ரூபாயைப் போன்றது சஞ்சித வினை. முதலீடு செய்த பணத்தில் சம்பாதிக்கும் கூடுதல் பணத்தைப் போன்றது ஆகாமிய வினை.இந்த வினைப்பதிவுகளே நல்வினை, தீவினைகளாக மாறி இன்ப துன்பங்களைக் கொடுத்து உயிர்களை பிறவி என்னும் சக்கரத்தில் சுழற்றுகிறது. இறைவன் உயிர்களின் ஆன்மாவினுள் உள்ளொளியாக இருந்து வினைப்பதிவுகளுக்கு ஏற்ப விளைவுகளைத் தந்து கொண்டிருக்கிறான்.”எனக்கு நினைவு தெரிந்த வரை யாருக்கும் தீங்கு நினைத்தது இல்லை, தீமை செய்தது இல்லை, எனக்கு மட்டும் ஏன் துன்பங்களும் துயரங்களும் வந்து கொண்டே இருக்கிறது…?!”, என்று பலரும் புலம்பிக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. அவர்கள் தங்கள் முந்தைய பிறவியின் வினைப் பதிவுகளைத் தற்சமயம் அனுபவித்து வருகின்றனர் என்பதே உண்மை.போன பிறவி என்று ஒன்று இருந்தால், அதில் நடந்த ஒன்றும் இப்போது நினைவில் இல்லையே என்று சிலர் கேட்கிறார்கள். சிறு குழந்தைப் பருவத்தில் நடந்த பல நிகழ்வுகள் நம் நினைவுக்கு வருவதில்லை. அப்படி இருக்கும் போது, அதற்கு முன்னர் வாழ்ந்த முற்பிறவி நிகழ்வுகளை எவ்வாறு சிற்றறிவைக் கொண்டு அறிந்து கொள்ளுதல் கூடும் !சில நேரங்களில் சிலருக்கு புதிய இடங்களுக்கு செல்லும் போது அந்த இடம் ஏற்கனவே பழகிய இடம்போலத் தோன்றும். புதிய நபர்கள் பரிச்சயமானவர்களாகத் தெரிவர். இவை எல்லாம் கடந்த பிறவிகளின் எச்சங்களே ஆகும்.மனிதன் உடைமாற்றுவதைப் போலவே,உயிர்கள் வினைகளுக்கு தகுந்தார்போல் உடல்களைப் பெற்று இறப்பை யும் பிறப்பையும் மாறீ மாறீ அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அதில் இன்ப துன்பங்களும் மாறி மாறி தொடர்ந்து வருகிறது. இவ்விதம் வினைகளின் வெம்மையால் வெதும்பி நிற்கும் உயிர்கள் பிறவிச் சக்கரத்தின் சுழற்சியிலிருந்து எங்ஙனம் விடுபடுவது ? அதாவது, விதியை வெல்ல முடியுமா ?முடியும் . நிச்சயமாக முடியும்.அதற்கு முதலில், புண்ணிய பலத்தினால் எறத்தாழ 84 லட்சம் தேக பேதம் உள்ள ஜீவராசிகளில் உன்னத பிறப்பாகிய மானிட குலத்தில் பிறந்து இருக்கவேண்டும். அடுத்து அப் பிறப்பில் நல்லோர்களை நாடி ஞான சத்குருவினை அடையவேண்டும். ஞானகுருவின் அருளால் தன்னை உணர்ந்து தனக்குள் இறைவனை உணர்ந்து, இறைவனோடு இறைவனாக கலக்க வேண்டும்.ஞானகுரு தீட்சை வழங்கும் போது காரண உடலாகிய இருள் தேகத்தில் ஞானஜோதியை ஏற்றுகிறார். இதனால் காரண உடலில் பதிந்துள்ள எண்ணப் பதிவுகளாகிய வினைகளின் வித்துக்கள் அழிகின்றன.ஞான குருவின் அருளால் இறைத் தன்மையோடு இரண்டறக் கலப்பதால் வினைகளின் வெம்மையைக் கடந்து இறப்பு பிறப்பு அவஸ்தைகளைக் கடந்து நித்தியமாக வாழலாம். விதியை வென்று நினைத்ததை நினத்தபடி செய்து முடித்து வெற்றிகரமாக வாழலாம்.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
No comments:
Post a Comment