92. வரைவின் மகளிர்
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
பால்; அறத்துப்பால் 1-38 , பொருட்பால் 39-108 , காமத்துப்பால் 109-133
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
இயல் ; பாயிரவியல் 1-4 , இல்லறவியல் 5-24
துறவறவியல் 25-37, ஊழியல் 38 , அரசியல் 39-63
அமைச்சியல் 64-73 ,அரணியல் 74-75
கூழியல் 76 , படையில் 77-78 , நட்பியல் 79-95
குடியியல் 96-108 , களவியல் 109-115 , கற்பியல் 116-133
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
குறள் 911:
அன்பின் விழையார் பொருள்விழையும்
ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத்
தரும்
மு.வ உரை:
அன் பினால் விரும்பாமல்
பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக்
கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
அன்பால் நம்மை விரும்பாது,
பொருள் பெறவே விரும்பும் பாலியல் தொழிலாளரின் இனிய சொற்கள் துன்பமே தரும்.
கலைஞர் உரை:
அன்பே இல்லாமல் பொருள்
திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு
இறுதியில் துன்பமே வந்து சேரும்
குறள் 912:
பயன்தூக்கிப் பண்புரைக்கும்
பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்
மு.வ உரை:
கிடைக்க கூடிய பயனை
அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை
ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனிடம் உள்ள செல்வத்தை
அடையும்வரை நல்லவராய்ப் பேசும், பண்பு இல்லாத பாலியல் தொழிலாளரின் ஒழுக்கத்தை நன்கு
எண்ணி, அவரைச் சேராது விடுக.
கலைஞர் உரை:
ஆதாயத்தைக் கணக்கிட்டு
அதற்கேற்றவாறு பாகுமொழிபேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது
குறள் 913:
பொருட்பெண்டிர் பொய்ம்மை
முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று
மு.வ உரை:
பொருளையே விரும்பும்
பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற்
போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
பொருளையே விரும்பும்
பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது
போலாம்.
கலைஞர் உரை:
விலைமாதர்கள் பணத்துக்காக
மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை
அணைத்துக் கிடப்பது போன்றதாகும்
குறள் 914:
பொருட்பொருளார் புன்னலந்
தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்
மு.வ உரை:
பொருள் ஒன்றையே பொருளாகக்
கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர்
பொருந்த மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
அருளோடுகூடப் பொருள்தேடும்
அறிவினை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.
கலைஞர் உரை:
அருளை விரும்பி ஆராய்ந்திடும்
அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்
குறள் 915:
பொதுநலத்தார் புன்னலந்
தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்
மு.வ உரை:
இயற்கை யறிவின் நன்மையால்
சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின்
புன்மையான நலத்தைப் பொருந்தார்.
சாலமன் பாப்பையா உரை:
இயல்பாகிய மதிநலத்தால்
சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.
கலைஞர் உரை:
இயற்கையறிவும் மேலும்
கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்
குறள் 916:
தந்நலம் பாரிப்பார்
தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார்
தோள்
மு.வ உரை:
அழகு முதலியவற்றால்
செருக்கு கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப்
போற்றும் சான்றோர் பொருந்தார்.
சாலமன் பாப்பையா உரை:
தம் திறமையில் செருக்குக்
கொண்டு, தம் உடல் அழகைப் பலருக்கும் தந்து பணம் பெற விரும்பும் பாலிய தொழிலாளரின் தோளை,
அறிவினால் தம் புகழைப் பரப்ப விரும்பும் பெரியோர் தீண்டமாட்டார்.
கலைஞர் உரை:
புகழ்ச்சிக்குரிய சான்றோர்
எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்
குறள் 917:
நிறைநெஞ்சம் இல்லவர்
தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்
மு.வ உரை:
நெஞ்சத்தை நிறுத்தி
ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப்
பொருந்துவர்.
சாலமன் பாப்பையா உரை:
பிறவற்றைப் பெறும்
பொருட்டு மன ஆசை கொண்டு, அதற்காகவே உடம்பால் புணரும் பாலியல் தொழிலாளரின் தோளை மன அடக்கம்
இல்லாதவரே தீண்டுவர்.
கலைஞர் உரை:
உள்ளத்தில் அன்பு இல்லாமல்
தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும்
நம்பிக் கிடப்பர்
குறள் 918:
ஆயும் அறிவினர் அல்லார்க்
கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு
மு.வ உரை:
வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின்
சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று
கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
வஞ்சிப்பதில் வல்ல
பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர்
கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர்.
கலைஞர் உரை:
வஞ்சக எண்ணங்கொண்ட
``பொதுமகள்'' ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட ``மோகினி மயக்கம்''
என்று கூறுவார்கள்
குறள் 919:
வரைவிலா மாணிழையார்
மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு
மு.வ உரை:
ஒழுக்க வரையரை இல்லாத
பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
வேறுபாடு கருதாது பொருள்
தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள்
புகுந்து மூழ்கும் நரகம் ஆகும்.
கலைஞர் உரை:
விலைமகளை விரும்பி
அவள் பின்னால் போவதற்கும் ``நரகம்'' எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே
இல்லை
குறள் 920:
இருமனப் பெண்டிரும்
கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார்
தொடர்பு
மு.வ உரை:
இருவகைப்பட்ட மனம்
உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின்
உறவாகும்.
சாலமன் பாப்பையா உரை:
உள்ளம் ஓரிடமும், உடம்பு
ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால்
விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.
கலைஞர் உரை:
இருமனம் கொண்ட பொதுமகளிருடனும்,
மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய
சிறப்பு அகன்றுவிடும்
No comments:
Post a Comment